நியூயார்க்
பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
பிரபல மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிறுவனருமான பில் கேட்ஸ் 1979 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இருந்த பில் கேட்ஸ் அதன் பிறகு தலைவர், தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் எனப் பல பதவிகளை வகித்தார்..
கடந்த 1994 ஆம் ஆண்டு அதே நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிந்த மெலிண்டா கேட்ஸ் மற்றும் பில் கேட்ஸ் திருமணம் ஹவாயில் நடந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து தங்கள் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கினர். இந்த அறக்கட்டளை மூலம் இருவரும் பல சமூக நலப் பணிகளைச் செய்து வந்தனர்.
சுமார் 27 ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள், “நாங்கள் கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை நன்கு வளர்த்துள்ளோம். மேலும் எங்கள் அறக்கட்டளையை உலகம் முழுவதும் பரந்து செயல்பட ஆவன செய்துள்ளோம். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் சுகாதார நலம் பெற்று வாழ வழிகள் செய்துள்ளோம்.
நாங்கள் இந்த பணியில் இணைந்து தொடர இருந்தாலும் எங்களது திருமண வாழ்வை இத்துடன் முடித்துக் கொள்வதாக முடிவு எடுத்துள்ளோம். நாங்கள் எங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திலும் தம்பதிகளாக இணைந்து தொடர்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.