சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டும், வரும் மே 6 ஆம் தேதி முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

இதன்படி, மே 6ம் தேதி முதல் மளிகை மற்றும் பலசரக்கு கடைகள் மதியம் 12 வரை மட்டுமே அனுமதி. சனி,ஞாயிறு இறைச்சி கடைகள் முழுமையாக மூடவும், மற்ற நாட்களில் 6மணி முதல் 12மணி வரை இயங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களது பரிந்துரையின் அடிப்படையிலும், மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியும், கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ், 01.05.2021 முதல் மறு உத்தரவு வரும்வரை தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய பல்வேறுகட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கான தடை மற்றும்கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் தடை செய்யப்பட்டசெயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில்,
06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4.00 மணி வரை பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

1. புதிய கட்டுப்பாடுகள்

· அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

· பயணியர் இரயில், மெட்ரோ இரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

· 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரியகடைகள் வணிக வளாகங்கள் இயங்க 26.4.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிகவளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறிகடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாகசெயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள்விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றிநண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள்மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கூறிய மளிகை, பலசரக்குமற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும்திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம்போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத்தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

· அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும்அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும்செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும்தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.விடுதிகளில் தங்கியுள்ளவாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

· உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது.

· ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
· ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், இயங்க தடை விதிக்கப்படுகிறது.

2. அனுமதிக்கப்பட்டவை

அ) இரவு நேர ஊரடங்கு

• அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனஉபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள்,மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும்அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

• ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

• பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

• தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப்பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

• தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

ஆ) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

• அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

• முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

• மற்ற மின் வணிக நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.

• ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

• அரசு ஆணை எண்.348, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,நாள் 20.4.2021-ல் பட்டியலிடப்பட்டுள்ள, தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்  தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

• முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம்/ திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

• தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல்தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புபணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

• இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

இ) பொது

• ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6.00 மணி முதல் 12.00 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை
கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அரசு கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.