கொல்கத்தா
மேற்கு வங்க முதல்வராக மூன்றாம் முறை தேர்வு செய்யப்பட்ட மம்தா பானர்ஜி வரும் 5 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.
நேற்று தமிழகம்,, மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் மேற்கு வங்கம் ஒன்றாகும்.
இம்மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 இடங்களிலும் இடது சாரிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.
முதலில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதன் பிறகு முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயினும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மம்தாவை மீண்டும் தலைவராகத் தேர்வு செய்துள்ளனர். கட்சியின் முடிவுப்படி மம்தா பானர்ஜி வரும் 5 ஆம் தேதி அன்று மேற்கு வங்க முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாதோர் முதல்வர் பதவி ஏற்றால் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வென்று பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.