கொல்கத்தா

தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாநிலத்தை ஆளும் திருணாமுல் மற்றும் மத்திய ஆளும் கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.   பாஜக சார்பில் பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் என ஒரு பட்டாளமே முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராகக் களத்தில் இறங்கியது.

ஆனால் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் திருணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.   நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்தார்.   இறுதியில் மம்தா பானர்ஜி முன்னிலைக்கு வந்த நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி மேற்கு வங்க மாநிலத்தில் மகிழ்ச்சி பொங்கியது.   ஆனால் சிறிது நேரத்தில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வென்றதாக அறிவிக்கப்பட்டது.  இதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மறு வாக்கு எண்ணிக்கை நடக்கவில்லை.

இது குறித்து மம்தா பானர்ஜி, ”நந்திகிராம் தொகுதியின் தேர்தல் அதிகாரி என்னிடம் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்தார்.  தற்போது அவருக்கு உயிர் அபாயம் ஏற்பட்டுள்ளது.   மேலும் தேர்தல் ஆணையம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்கவில்லை.  நான் இதற்காக நீதிமன்றத்தை அணுக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=p0GeglCdsgU]