“காதல் என்பது பொதுவுடமை..” என்கிற தத்துவ திரைப்பாடல் உண்டு. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. மூன்றாம் பாலினமான திருநங்களுக்கும் உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளில் காதலும் உண்டு என்பதை ஆகப்பெரும்பாலோர் ஒப்புக்கொள்வதில்லை.
ஆகவே காதல்.. காதலர் தினம் குறித்து திருநங்கை ஓல்காவிடம் கேட்டோம். குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும், போராடும் bravoh என்ற சமூகசேவை அமைப்பை நடத்திவருபவர் இவர். பல்வேறு சமூகப்பணிகளுக்காக விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.
இதோ திருநங்கை ஓல்கா பி. ஆரோன், காதல், காதலர் தினம், தனது காதல் குறித்தெல்லாம் மனம் திறக்கிறார்:
“உண்மையில் இந்த தினம் காதலர்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமான பாசப்பிணைப்பு தினம்தான். இளைஞர் கூட்டம்தான், இந்த தினத்தை காமத்தை அடிப்படையாக வைத்து காதலர் தினமாக மாற்றிவிட்டார்கள். வியாபாரிகளும் திட்டமிட்டு, நுகர்வு கலாச்சாரத்தை உருவாக்க இந்த தினத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்.
காமத்தை அடிப்படையாகவைத்து மாத்திட்டாங்க. வியாபாரிகள்
திருநங்கைகளுக்கும் காதல் உணர்வு உண்டு. ஆனால், திருநங்கைகளை இன்னமும் தாழ்மையானவர்கள் என்று நினைத்து பார்ப்பவர்கள்தானே அதிகம்.
இதற்குக் காரணம், மறு உற்பத்தி செய்யக்கூடிய விசயத்துக்குத்தான் மதிப்பு. அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடிய ஆணும், பெண்ணுக்கும் மதிப்பு உண்டு. அந்த வாய்ப்பு இல்லாதவர்களை சமுதாயம் மதிப்பதில்லை.
திருநங்கைகள் என்றில்லை, குழந்தை இல்லாதவர்கள், தனிமையை விரும்பி வாழும் பெண்களுக்கும் இங்கே மரியாதை கிடையாது.
அப்படிப்பட்டவர்களை,” முதிர்கன்னி, வாழாவெட்டி, மலடி” என்று தூற்றுவார்கள். அந்த வரிசையில்தான் திருநங்கைகளும் வருகிறார்கள்.
இந்த காதல் என்பதே, ஆணைச் சார்ந்துதான் உருவாக்கப்படுகிறது. அதாவது, உலகம் தூற்றக்கூடாது. ஆகவே, எத்தனை மோசமானவனாக இருந்தாலும் நமக்கு ஒரு ஆண் துண வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை சமுதாயம் ஏற்படுத்துகிறது. அந்த நிர்ப்பந்ததிற்கு அடிபணிந்து வாழ்பவர்களுக்குத்தான் காதலும், காதலர் தினமும்!
அப்படி ஆணுக்கு அடிமையாகும் பெண்ணாகத்தான் திருநங்கைகள் பெரும்பாலோர் இருக்கிறார்கள். இதற்குக்காரணம், அவர்களுக்கு ரோல் மாடல் தாய்தான்.
மதியம் சாப்பாடு சரியில்லை என்று அம்மாவை அப்பா அடிக்கிறார். ஆனால், மாலை அப்பா அலுவலகத்தில் இருந்து வரும்போது, பூ பொட்டு வைத்து அப்பாவுக்காக காத்திருக்கிறாள் அம்மா. இதைப் பார்த்து வளரும் பெண்களைப்போலவே, திருநங்கைகளும் அப்படியே உருவாகிறார்கள்.
திருநங்கைகளுக்கும் மனது என்று உண்டு. அதில் காதலும் நிரம்ப உண்டு. அன்புக்காகவும் காதலுக்காகவும் ஏங்குகிறவர்கள் அவர்கள்.
ஆனால் இந்த உலகம் அவர்களை சக உயிராகவே மதிப்பதில்லை. பிறகு எப்படி அவர்களது காதலை மதிக்கும்?
ஆகவே இருட்டுக்குள் தன்னுடன் உறவு கொள்ளும் போது, “கண்ணே மணியே.. உலகிலேயே நீதான் அழகி..” என்று ஆண் புகழும்போது, மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறார்கள் திருநங்கைகள். அதே ஆண் வெயிடத்தில் திருநங்கைகளை, “போடா பொட்டை” என்கிறான்.
தன்னை முழுமையான பெண்ணாகவே உணர்ந்த திருநங்கைகளுக்கு இது மிகப்பெரிய மன வலியை கொடுக்கிறது. ஆகவேதான் இருட்டிலாவது ஆண் புகழ்கிறானே, அங்கீகரிக்கிறானே என்று விபச்சார தொழிலில் ஈடுபடுகிறார்கள். திருநங்கைகள் விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதாக சொல்பவர்கள் இதை உணர வேண்டும். திருநங்கைகளுக்கு பணம் முக்கியமல்ல. தனக்கான அங்கீகரம்தான் முக்கியம். அது இருட்டில் கிடைப்பதால் விபசார குழியில் வேறு வழியின்றி விழுகிறார்கள். பணம் இரண்டாம் பட்சம்தான்.
என்னைப் பொறுத்தவரை என் முதல் காதலும் கடைசி காதலும் என் அம்மாதான். பருவ வயதில், நான் பெண் என்பதை உணர்ந்தபோது அதை என் அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் உணரவைத்தேன். ஆகவே பெரும்பாலான திருநங்கைகளைப்போல வீட்டைவிட்டு வெளியேறி சிரமப்படவில்லை.
என்னை காதலிப்பதாக நிறைய ஆண்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்போதும் கூட சிலர் புரப்போஸ் செய்கிறார்கள். அப்படிப் பார்த்தால் எனக்கு நிறைய காதலர்கள் உண்டு. (சிரிக்கிறார்) ஆனால் நான் யாரையும் காதலிக்க தயாராக இல்லை. என்னை நெருங்க அனுமதிப்பதில்லை.
காரணம், பழகும் ஆண்கள் அனைவருக்குமே கட்டில்தான் லட்சியமாக இருக்கிறது.
என்னை ஒரு தோழியாக, சமூக சேவகியாக நினைத்து, ஒன்றாக ஒரே படுக்கையில் படுத்தாலும், இரவு முழுதும் என்னை புத்தகங்களை படிக்க அனுமதிக்கும் காதலன் கிடைப்பானா?
அப்டிப்ட்ட ஆண் இருக்கவே மாட்டான்.
எனக்கென வேறு லட்சியங்கள் இருக்கின்றன. மனித உரிமைகளுக்காக போராட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
அதே நேரம் எனக்கும் காதல் உணர்வு உண்டு. அதைக் கட்டுப்படுத்தி வாழ பழகிவிட்டேன்.
உணவு இன்றி வாழ முடியாது. ஆனால் காதல் இன்றி வாழலாம்!
நான் வாழ்கிறேன்.. மகிழ்ச்சியாகவே!” – கம்பீரமாகச் சொல்லி முடிக்கிறார் ஓல்கா
பேட்டி: டி.வி.எஸ். சோமு