திருவனந்தபுரம்: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ள சூழலில், கேரளாவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சியே அமையும் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன.

கேரளாவைப் பொறுத்தவரை, மிக நீண்டகாலமாக, ஒருமுறை காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால், இன்னொருமுறை கட்டாயம் கம்யூனிஸ்ட் கூட்டணிதான் ஜெயிக்கும் என்ற நிலை இருந்து வந்தது.

அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை, எந்தப் பெரிய கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காது. அந்தளவிற்கு இடங்களிலும் அவை போட்டியிடாது. கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும்.

கடந்த 2016 தேர்தலில், இடது முன்னணி வெற்றிபெற்று தற்போது ஆட்சியில் உள்ளது. எனவே, கேரள டிரெண்டிங்படி பார்த்தால், இந்தமுறை காங்கிரஸ் கூட்டணிதான ஆட்சிக்கு வருவதாய், கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்க வேண்டும்.

ஆனால், மாறாக, ஆட்சியிலுள்ள இடது முன்னணியே மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதாய் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் கிட்டத்தட்ட இதையே கூறியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சபரிமலை, தங்கக் கடத்தல், கொரோனா உள்ளிட்ட பல சர்ச்சைகளைத் தாண்டி, இடது முன்னணி உண்மையிலேயே வென்றால், அது சாதனையாகத்தான் இருக்கும்.

140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில், 71 இடங்கள் பெற்றால் ஆட்சியமைக்கலாம். ஆனால், இடது கூட்டணிக்கு குறைந்தபட்சம் 72 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.