சென்னை: விவேக் உயிரிழந்த போது, தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டதுடன், முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக், அடுத்த நாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இது சர்ச்சையானது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, அவர்மீது, சென்னை மாநகராட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. வடபழனி காவல் நிலையத்தில் மன்சூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முன்ஜாமின் கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அபராத பணத்தை தடுப்பூசி வாங்குவதற்காக சுகாதாரத் துறைக்கு வழங்க வேண்டும் எனவும் கூறிய நீதிமன்றம், கொரோனா தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளைப் பரப்பும் பணிகளில் ஈடுபடக் கூடாது என மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவருக்கு முன்ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டது.