கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சாம்சன். நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். இதற்கு முன் கடையநல்லூரில் பணியாற்றிய போது, சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, மக்களின் பாராட்டைப் பெற்றவர்.
சமீபத்தில் களியக்காவிளையில் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் உரிய அனுமதியின்றி பேனர் வைத்திருந்தனர். போக்குவரத்துக்கு இடையூராக இருந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார் சாம்சன்.
இதை கேள்விப்பட்ட களியக்காவிளை அதிமுக ஒன்றிய செயலாளர் உதயகுமார் சாம்சனுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார். அப்போது, ஆய்வாளர் சாம்சனை ஒருமையில் கடுமையாக திட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதி வேகமாக பரவி வருகிறது. நமது patrikai.com இதழிலும் அந்த ஆடியோவுடன் செய்தி வெளியிட்டிருந்தோம். மிரட்டல் விடுத்த உதயகுமாருக்கு கண்டனங்களும், பிளக்ஸ் போர்டுகளை அகற்றிய சாம்சனுக்கு பாராட்டுகளும் குவிகின்றன.
இந்த விவகாரத்தை ஈகோ பிரச்சினையாக எடுத்துக்கொண்டிருக்கிறாராம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாவட்ட புள்ளி. “அந்த இன்ஸ்பெக்டர், நம்ம பேனர்களை அகற்றியதோடு, நம்ம ஆள் (உதயகுமார்) பேசியதை பதிவு செய்து ஊரெல்லாம் பரப்பிட்டாரா? இதுக்காகவே அதே இடத்தில் மீண்டும் பிளக்ஸ் பேனர்களை வைக்க வேண்டும். முன்பை விட பெரிதாக வைக்க வேண்டும். அந்த இன்ஸ்பெக்டர் என்ன செய்து விடுவார் என்று பார்த்துவிடுகிறேன்” என்று சூளுரைத்திருக்கிறாராம்.
ஆகவே, “மறுபடி அதே இடத்துல பேனர்கள் வரும்!” என்று கன்னியாகுமரி மாவட்ட ஆளும் கட்சியினர் “பெருமை”யுடன் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் சாமசனை மிரட்டிய உதயகுமார், மகிழ்ச்சியில் திளைக்கிறாராம். “இப்போ என் குரல் உலகம் முழுக்க பரவிவிட்டது” என்று புளகாங்கிதம் அடைகிறாராம். இவருக்கு விரைவில் கட்சியில் முக்கிய பொறுப்புகள் தரப்படலாம் என்கிற பேச்சு கன்னியாகுமரி மாவட்டத்தில் உலவுகிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி வைத்த பேனர்களால் சமீபத்தில் கோவையில் விபத்து ஏற்பட்டதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல… பிளக்ஸ் பேனர்கள் வைக்கும்போது, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அனுமதி எண்ணையும் பிளக்ஸ் பேனர்களில் குறிப்பிட வேண்டும். ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அ.திமு.கவினர் அனுமதி இன்றி பேனர்களை வைத்திருக்கிறார்கள்.
விழா நடக்கும் மூன்று நாட்கள் முன்பும், இரண்டு நாள் வரையிலும் மட்டுமே பிளக்ஸ் பேனர்களை வைக்க வேண்டும் என்றும் விதி உள்ளது. ஆனால் வரும் 24ம் தேதி வரவிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக ஏற்கெனவே பல இடங்களில் பிரம்மாண்டமான பிளகஸ் பேனர்களை வைத்திருக்கிறார்கள் அ.தி.மு.கவினர்.