தூத்துக்குடி: மூடப்பட்ட வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கா திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், 4 மாவட்ட காவல்துறை உயர்அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
உயிர்கொல்லி நோயக்ளை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, பேரும் போராட்டம் மற்றும் 15பேர் உயிர்பலி, 10க்கும் மேற்பட்டோர் ஊனமுற்ற அவலம் நிகழ்ந்த பிறகு, அந்த ஆலையை தமிழகஅரசு மூடி சீல் வைத்தது. ஆனால், தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை திறக்க மத்தியஅரசும், உச்சநீதிமன்றமும் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக, அதிமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகளும், ஆலையை 4 மாதங்கள் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால், தூத்துக்குடி பகுதி மக்கள், அந்த பகுதியைச் சேர்ந்த அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே கருத்து கேட்பு கூட்டத்தின்போது, ஆட்சியர் அலுவலகத்தில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இருந்தாலும் மக்களின் எதிர்ப்பை மீறி ஆலையை திறக்க தமிழகஅரசு அனுமதித்ததால், உச்சநீதிமன்றமும், ஆலையை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை, ஆட்சியர் அலுவலகம் உள்ள பகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு உள்ளனர். பல பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனையில் நெல்லை காவல்துறை ஆணையர் அன்பு, நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், தென்காசி எஸ்பி சுகுணா சிங், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.