டெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இதை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்சிஜன் தயாரித்து தர ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, திமுக, அதிமுக உள்பட பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க அனுமதிக்கலாம் என தீர்மானம் இயற்றி, அதை உச்சநீதிமன்றத்தில் பிரம்மான பத்திரமாக தாக்கல் செய்தது.
இதையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறினார்.
விசாரணையின்போது, ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஆலை திறக்கப்படுகிறது என்றால் உள்ளூர் மக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நிபுணர்கள் ஆகியோர் அரசு அமைக்கும் குழுவில் இடம்பெற வேண்டும் என உள்ளூர் மக்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், தமிழ்நாட்டில் “சுற்றுச்சூழல் நிபுணர்” என்றெல்லாம் யாரும் கிடையாது என மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆலையால் 10 நாட்களில் 200 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை திறக்கலாம் எ ன உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்; தாமிர ஆலைக்குள் செல்லக் கூடாது என்றும், ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும், அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை மத்தியஅரசுதான் பிரித்துக் கொடுக்கும் என்றும்கூறியது.
மேலும், “ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனை மட்டுமே உற்பத்தி செய்யும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை” என்று நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெளிவுபடுத்தி உள்ளார்.