டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், தடுப்பூசிகளை மாநில அரசே வாங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சில மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. அதை ஏற்று, தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசிகளின் விலையை, சீரம் நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனங்களும் அதிரடியாக உயர்த்தி உள்ளன. அதன்படி மத்தியஅரசுக்கு ஒரு விலையிலும், மாநில அரசுக்கு வேறு ஒரு விலையிலும், தனியார் மருத்துவமனைக்கு மற்றொரு விலையும் நிர்ணயித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி இலவசம் என்று அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசியில் எழுந்துள்ள விலைதொடர்பான சர்ச்சை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றுக்கு , மத்திய அரசின் சரியான திட்டமிடல் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார்.
தொடர்ந்து ராகுல்காந்தி இன்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் விவாதித்தது போதும்.
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி பெற வேண்டும்
பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்காதீர்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.