சென்னை: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து, திமுக எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. விளக்கியுள்ளார்.
தூத்துக்குடியில் சுற்றுசூழல் மாசு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தின் முடிவில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, மூடியதே தமிழக அரசுதான்.ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படும்,’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம் முடிவடைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, கொரோனா பரவல், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக 4 மாதங்களுக்குத் திறக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போது வேறு வழியில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி நிரந்தரமாக ஆக்சிஜன் தயாரிக்கவோ நிரந்தரமாக ஆலையை இயக்கவோ எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
அரசின் சார்பில் இதனை கண்காணிக்க ஒரு குழு அவசியம். அதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சுற்றுசூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பொதுமக்கள் ஒத்துழைப்போடு, குழுவின் நேரடி கண்காணிப்பில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி தயாரிக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்க அனுமதி வழங்கக்கூடாது.
தாமிரம் உற்பத்திக்கோ அல்லது வேறு ஏதேனும் உற்பத்திக்கோ அனுமதிக்கக்கூடாது. ஆலையில் டெக்னீஷியன் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று தயாரிக்கப்படும் ஆக்சிஜன், தமிழகத்தின் தேவையை முற்றிலுமாக நிறைவேற்றியபிறகே மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஆலையை இயக்க தமிழக அரசு மின்சாரம் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை சொந்தமாக மின்சாரம் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது
உள்ளிட்டவற்றை வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.