‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் மூலக்கூறு உரிமை பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுக்கு சொந்தமானது, இதனை இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்ய அனுமதி பெற்றுள்ள சீரம் நிறுவனம் இதற்காக அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்திற்கு உரிமை தொகை (ராயல்டி) வழங்குகிறது.

இதனை காரணமாக கூறி, சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய மூன்று விதமான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

சீரம் நிறுவனத்தை தொடர்ந்து விலையை ஏற்றி உள்ள மற்றொரு நிறுவனமான பாரத் பையோடெக் தனது தயாரிப்பான ‘கோவாக்சின்’ மருந்துக்கான உரிமை தொகை யாருக்கு வழங்குகிறது என்பதிலும், உரிமை யாரிடம் உள்ளது என்பதிலும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) கீழ் செயல்படும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி – என்.ஐ.வி.) நடைபெற்ற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சார்ஸ்-கோவ் 2 வகை வைரஸை கொண்டு இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.வி. வழங்கிய சார்ஸ்-கோவ் 2 வகை வைரஸை கொண்டு அதனை மேம்படுத்தி மருந்து தயாரித்து வருகிறது பாரத் பையோடெக் நிறுவனம்.

பாரத் பையோடெக் நிறுவனத்துக்கு தனது கண்டுபிடிப்பை தாரை வார்த்த என்.ஐ.வி. க்கு ஆராய்ச்சிக்கான நிதி உதவியை ஐ.சி.எம்.ஆர். மூலம் மத்திய அரசு பொதுமக்களின் நிதியில் இருந்து வழங்கியது.

மருந்து தயாரிப்பதற்கு பாரத் பையோடெக் மற்றும் என்-ஐ.வி. அல்லது ஐ.சி.எம்.ஆர். இடையே என்னென்ன சரத்துகளின் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை.

இந்நிலையில், கோவாக்சின் மருந்தின் விலையை பாரத் பையோடெக் நிறுவனம் பன்மடங்கு உயர்த்தி இருப்பதால், இந்த லாப பணம் எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே ஆராய்ச்சிக்காக மக்கள் பணம் நிதியாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசிக்கென்று மாநில அரசுகள் மூலம் மக்கள் பணம் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சென்று சேர்வது பல்வேறு சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த மருந்தை ஆகஸ்ட் 15 அன்று முறையான ஆய்வு முடிவுகளுக்கு முன்பே வெளியிட பாரத் பையோடெக் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகவும், முறையாக செயல்படுத்தாவிடில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் ஜெனரல் பலராம் பார்கவா தெரிவித்திருந்தார்.

இதன் மூலம், ஐ.சி.எம்.ஆர்.ரின் ஒப்புதல் இல்லாமல் பாரத் பையோடெக் நிறுவனம் மத்திய அரசை நேரடியாக தொடர்புகொண்டு காரியம் சாதித்து வந்தது விளங்குகிறது. மேலும், பாரத் பையோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆரின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம் என்பதும் இதுபோன்ற ஒரு கடிதம் எழுதுவதற்கு, பாரத் பையோடெக் என்ன மாதிரியான விதிமுறைகளை மீறியது என்பதும் சரியாக தெரியவில்லை.

அடுத்ததாக, இந்தாண்டு ஏப்ரல் 17 ம் தேதி, மும்பையின் ஹஃப்கின் உள்ளிட்ட மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் உரிமையை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இந்த மருந்து தயாரிக்கும் உரிமை பாரத் பையோடெக் நிறுவனத்திற்கு மட்டுமே உள்ளது என்றால் அதை பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு எப்படி வழங்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

கோவாக்சின் மருந்தின் உரிமை யாரிடம் உள்ளது என்பது குறித்து தெளிவாக எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றபோதும், மத்திய அரசின் பொது நிதி விதிகள் 2017 ன் படி, அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆய்வின் விளைவாக உருவாக்கப்படும் பொருளின் உரிமை நிதியளித்தவரையே சாரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பாரத் பையோடெக் நிறுவனத்திற்கும் ஐ.சி.எம்.ஆர். ஆகியவற்றுக்கும் இடையில் கோவாக்சின் தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சரத்துகள் என்ன என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

கோவாக்சின் ஆய்வு குறித்து வெளியான ஆறு ஆய்வு கட்டுரைகளில், இந்த ஆய்வுகளுக்கு நிதி உதவி செய்தவர்கள் யார் என்ற தகவலின் அடிப்படையில், நான்கு ஆய்வுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம், ஐ.சி.எம்.ஆர். அல்லது என்.ஐ.வி. ஆகியவை நிதி வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.

இந்த ஆறு ஆய்வுகளையும் ஐ.சி.எம்.ஆர்., பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இனைந்து நடத்தி இருப்பதையும், அதில் ஐந்து ஆய்வுக்கு பல்ராம் பார்கவ் துணை புரிந்திருப்பதும் அந்த ஆய்வறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பல்வேறு மாநில அரசுகள் தடுப்பூசியை அனைத்து வயதினருக்கும் இலவசமாக வழங்க முன்வந்திருக்கும் போதும், மாநில அரசிடம் இருந்து கோவாக்சின் மருந்துக்கு வழங்கப்படும் பணம் யாருக்கு செல்கிறது என்பது குறித்தும், பாரத் பையோடெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளது.