சென்னை: டெல்லி அணி நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி, வெற்றிபெறும் வாய்ப்பிருந்தும், கேன் வில்லியம்சன் களத்தில் இருந்தும், அவரின் பினிஷிங் திறமையின்மையால், ஐதராபாத் அணி தோற்க நேரிட்டுள்ளது.

டெல்லி அணியின் இலக்க‍ை விரட்டிய ஐதராபாத் அணியில், பேர்ஸ்டோ 38 ரன்களில் அவுட்டானார். ஆனால், அதன்பிறகு கேன் வில்லியம்சன் மட்டுமே, நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் நின்றார்.

அவர், 51 பந்துகளில் 66 ரன்களை எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். அவருடன், கடைசி கட்டத்தில் களத்தில் நின்ற ஜகதீஷா சுச்சித் 6 பந்துகளில், 14 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்தார்.

கடைசி ஓவரில், 2 பந்துகளில், 3 ரன்கள் தேவை என்ற நிலையில், எளிதாக ஐதராபாத் வெல்லும் நிலை இருந்தது. கேன் வில்லியம்சன் வசம் ஸ்ட்ரைக் வந்தது. ஆனால், அவரால் தேவையான ரன்களை அடிக்க முடியவில்லை. கடைசியில், 159 ரன்களையே அந்த அணியால், 20 ஓவர்களில் எடுக்க முடிந்தது.

எனவே, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் (கேன் வில்லியம்சன் & டேவிட் வார்னர்), ஒரு ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதன்பிறகு, ஒரு ஓவரில் 8 ரன்களை அடிக்கும் இலக்கில் களமிறங்கிய டெல்லி அணி(ரிஷப் பன்ட் & தவான்), 1 ஓவரில் 8 ரன்களை எடுத்து வென்றது.