சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், மேலும் 20லட்சம் டோஸ் தடுப்பூசிகளை 10 நாட்களுக்குள் அனுப்பி வையுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் உங்கள் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிப்ரவரி 2021 இறுதிவரை தமிழகத்தில் கொரோனா சதவீதம் தொடர்ந்து குறைந்து வந்தது. இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வந்தது. மொத்த தொற்று எண்ணிக்கையும் குறைந்து வந்தது.
இருப்பினும், தேசிய அளவில் தொற்று மீண்டும் அதிகரித்ததற்கு ஏற்ப, தமிழகமும் அதில் இருந்து தப்ப முடியவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் 2021இல் புதிய தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தினசரி தொற்று எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டிவிட்டது. சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு 3,300 ஆகும்.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும், நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பை விரைவாகக் கட்டுப்படுத்தவும், தகுதியுள்ளவர்களுக்கு சோதனை, தடமறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற நடைமுறைகளை அரசு கண்டிப்பாகப் பின்பற்றுகிறது. கோவிட்-19 இறப்பை மிகக் குறைந்த எண்ணிக்கையில் கட்டுப்படுத்தவும், ஆரம்பத்தில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான தொற்று எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழகத்தால் முடிந்தது.
ஏப்ரல் 20 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பு தவிர, கடுமையான கட்டுப்பாட்டுடன் மைக்ரோ-கன்டெய்ன்மென்ட் போன்ற கட்டுப்பாடு மற்றும் பிற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தொற்று ஏற்பட்ட நோயாளிகளை மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், பராமரிப்பு மையங்கள் அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பரிசோதிக்க நிலையான மற்றும் நடமாடும் காய்ச்சல் முகாம்கள், சோதனை மையங்கள் மற்றும் சிகிச்சை மையங்களையும் அரசு அமைத்துள்ளது.
கோவிட் வழிகாட்டு நெறிமுறைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. கடைப்பிடிக்கத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையைக் கொண்டுவந்துள்ளது. விழிப்புணர்வை உருவாக்க பிரச்சார அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2021 மார்ச் 16 முதல், மொத்தம் 3.94 லட்சம் பேருக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.8.35 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் நடவடிக்கையில், இதுவரை அரசு 47.31 லட்சம் பேருக்குப் போடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில், பின்வரும் பிரச்சினைகளில் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்து நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன்:
- தமிழகத்தில் தடுப்பூசி போடுவதைத் துரிதப்படுத்தி அதிகரித்து வருவதால், குறைந்தபட்சம் பத்து நாட்கள் தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்பட, இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுபவர்கள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தேதியில் தடையின்றிப் போடுவதற்கு ஏதுவாக தனிப்பட்ட தடுப்பூசி மையங்களில் பற்றாக்குறை இல்லாமல் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனுப்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
- ரெம்டெசிவிர் உற்பத்தி செய்யப்படும் மாநிலத்திற்குள் மட்டுமே ரெம்டெசிவிர் விற்பனை முன்னுரிமை அளிக்கப்படுவது நடக்கிறது. இதுபோன்ற செயல் மதிப்புமிக்க உயிர் காக்கும் மருந்துகள் தேவைப்படும் இடங்களில் கிடைப்பதற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கட்டான இந்தக் கட்டத்தில், ரெம்டெசிவிரை எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய தனிப்பட்ட மாநிலங்களின் எந்தவொரு தடை உத்தரவும் போடுவது தடை செய்யப்பட வேண்டும். நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு முன்னுரிமை தராமல் தேவைப்படுபவர்களுக்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- தமிழகத்தில் செங்கல்பட்டு நகரில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைக்கப்பட்டிருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் தேசிய அளவில் தடுப்பூசி பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய முக்கியத்துவம் கருதி மத்திய அரசால் உருவாக்கப்பட்டது இந்த வளாகம் ஆகும். தற்போது செயல்படத் தயாராகவும், அனுமதிக்காகவும் காத்திருக்கிறது.
இந்த வளாகத்தைச் செயல்படுத்துதற்குத் தடையாக ஏதேனும் நிலுவைப் பணிகள் இருந்தால், அதை விரைந்து முடிப்பதற்கான சாத்தியத்தைக் காண வேண்டும். கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இந்த வளாகத்தை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.