ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் 44 வயது ரமேஷ். ரஞ்சிதா என்ற பெண்ணை மணந்து இரு குழந்தைகள் பெற்ற இவர், அடுத்ததாக இந்துமதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில்தான் சூனியக்காரி என்று சொல்லப்படும் தனலட்சுமி என்ற பெண்ணின் மூலம் பயங்கரம் சூழ ஆரம்பித்தது.
உன் கணவனின் மகளான 6 வயது சிறுமியை நரபலியிட்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று இந்துமதிக்கு தனலட்சுமி தூபம் போட்டிருக்கிறார்.
இதற்கு இந்துமதி மட்டும் மயங்கவில்லை இந்துமதியின் கணவரான ரமேஷும் அவரது முதல் மனைவி ரஞ்சிதாவுமே மயங்கினார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை..
4 பேருமே சேர்ந்து சிறுமியை நரபலி கொடுக்க தக்க சமயம் பார்த்துக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்..
இந்த விஷயம் சிறுமியின் அம்மா வழி பாட்டி பாக்கியத்திற்கு தெரிந்து போய் அவர் இதுபற்றி கண்டித்திருக்கிறார்..
ஆனால் பதிலுக்கு ரமேஷ் தன் மனைவிகளோடு சேர்ந்து மாமியார் பாக்கியத்திற்கு எந்த விளக்கமும் அளிக்காமல், உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்று சொல்லி விரட்டி அடித்து இருக்கிறார்.
இதன் பிறகு வேறு வழியில்லாமல் மாவட்ட காவல்துறையை நாடியிருக்கிறார் பாக்கியம்.
நரபலி விஷயம் போலீசில் புகார் ஆகிவிட்டது என்று தெரிந்ததும், சிறுமியின் தந்தை ரமேஷ், தாயார் ரஞ்சிதா இந்துமதி நரபலிக்கு யோசனை தெரிவித்த தனலட்சுமி அவரின் நண்பர் மாரியப்பன் ஆகிய 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
போலீஸ் வலைவீசி தேடியதில் பெருந்துறை அருகே காரில் சென்று கொண்டிருந்த 5 பேரும் நேற்று வசமாக போலீசாரிடம் சிக்கினர்.
இந்த நரபலி முயற்சி குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தெரிவித்துள்ளார்..
பெற்றோர்களே 6 வயது மகளை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் ஈரோடு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
– வி.பி.லதா