சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நாசர் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரை உலகில் புகழ் பெற்ற வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் நாசர் ஆவார். இவருடைய மனைவி கமீலா நாசர். இவர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சென்னை மண்டல மாநிலச் செயலாளர் பதவியில் இருந்தார்.
சென்ற மக்களவை தேர்தலில் இவர் இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
மக்கள் நீதி மய்யம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நமது கட்சியில் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த திருமதி கமீலா நாசர் அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
20-04-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புக்களில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக்கப்பட்டுள்ளா என்பதை இதன் மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.