புதுடெல்லி: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம்.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம். இதனால், ரயில் பயணங்களின்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பது கடந்த மே மாதம், ரயில்வேத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவும் சூழ்நிலையில், ரயில் வளாகங்கள் மற்றும் ரயில் பயணங்களின்போது, எச்சில் துப்புவதும், முகக்கவசம் அணியாமல் இருப்பதும் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.