
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார்.
அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் : “நீங்கள் எங்களை விட்டுச் சென்று விட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். பல தசாப்தங்களாக எங்களுக்குப் பொழுதுபோக்கைத் தந்திருக்கிறீர்கள். நீங்கள் விட்டுச் சென்ற உங்கள் படைப்புகள் என்றும் எங்களுடன் இருக்கும்”
சிவகார்த்திகேயன் : “அதிர்ச்சியாகவும் சோகமாகவும் இருக்கிறது. உங்களைப் போன்ற ஒரு சகாப்தத்துடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லையே. உங்களைப் போன்ற ஆளுமையிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் தவறவிட்டு விட்டேன். உங்களை என்றென்றும் மிஸ் செய்வேன். குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்”
சூர்யா : “மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாகத் தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார். மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்”
யோகி பாபு : “விவேக் சாருடைய மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடன் குறைவான படங்களில் தான் நடித்தேன். நிறைய அட்வைஸ் செய்தார். அண்ணன், தம்பி மாதிரி பழகினோம். ‘அரண்மனை 3’, ‘பிகில்’ ஆகிய படங்களில் அவருடன் நடித்துள்ளேன். அடுத்டுத்து இணைந்து படம் பண்ணுவோம் அண்ணே என்றேன். கண்டிப்பா டா, கதை கேட்டுட்டு இருக்கேன் என்றார்.
நான் பார்த்த தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு காமெடி நடிகரை இன்னொரு காமெடி நடிகர் தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தவர் விவேக் சார். அவருடன் பழகியதால் இதைப் பார்த்துள்ளேன். போகிற போக்கில் மரக்கன்றுகள் நட்டுக் கொண்டு போடா. வரும் காலம் அதைச் சொல்லும்டா என்றார். இன்று நாம் அவரை இழந்துவிட்டோம். அவருடைய இழப்பு மாபெரும் இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்”
சூரி : “இது ரொம்ப கொடூரமானது. அந்த மனுஷன் சினிமாவுக்கு வந்து, 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்தங்களைக் கொண்டு போய் சேர்த்தவர். அவர் காமெடியன் அல்ல, உண்மையான ஹீரோ. ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட விழிப்புணர்வு செய்யக் கூடியவர். தான் எந்தவொரு விஷயம் செய்தாலும் அது மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்று நினைத்த மனிதர்.
அண்ணன் விவேக் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டுமல்ல, அவர் நட்டுவைத்த கோடிக்கணக்கான மரங்கள் கூட அழுது கொண்டிருக்கும்.
இந்த உலகம் உள்ளவரை விவேக் அண்ணன் இருப்பார். நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள். எங்கள் கூடவே இருப்பீர்கள். அந்த இயற்கை தான் அண்ணனின் குடும்பத்துக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்க வேண்டும்”
விக்ரம் : “என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரணச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ்த் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்”
[youtube-feed feed=1]