லண்டன்: பஞ்சாப் வங்கி மோசடி காரணமாக தலைமறைவான பிரபல குஜராத் வைரவியாபாரி நிரவ் மோயை நாடு கடத்தலாம் என கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அரசு, அவரை நாடு கடத்த அனுமதி வழங்கியுள்ளதாக சிபிஐ தெரிவித்து உள்ளது.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்று தலைமறைவானவர் குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு வெளிநாடுகளில் மறைந்து வாழ்ந்து வந்தார். முதலில் மேற்கிந்திய தீவு நாடொன்றில் அவா் தஞ்சம் புகுந்தாா். ஆனால், இந்திய அரசின் நெருக்கடி காரணமாக, அங்கிருந்து வெளியேறி பிரிட்டன் வந்தாா். தலைநகா் லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை ஸ்காட்லாந்து போலீஸாா் கடந்த ஆண்டு (2019) மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் தென்மேற்கு லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.யும் மேற்கொண்டுள்ளன.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் அமலாக்கத் துறை நிரவ் மோடியை நாடுகடத்த அனுமதி கோரி வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து 2021 பிப்ரவரி 25-ம் தேதி பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்வதற்கு நீரவ் மோடி சதித் திட்டம் தீட்டியதில், அவா் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவா் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகின்றன.
இந்திய விசாரணை அமைப்புகள் உறுதியளித்தபடி தனக்கு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காது என்று நீரவ் மோடி கூறும் வாதத்தை ஏற்க முடியாது. அவா் மீதான வழக்குகளில் இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பில் தெரிவித்திருந்தார்.
பிரிட்டனின் நாடு கடத்தல் விதிகள்படி, நீதிபதி தனது உத்தரவை பிரிட்டன் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேலுக்கு அனுப்பி வைப்பாா். அந்த உத்தரவு மீது 2 மாதங்களுக்குள் அமைச்சா் முடிவெடுப்பாா். அதன் பிறகு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
அதன்படி, நீதிபதியின் உத்தரவை ஏற்று நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் ஒப்புதல் அளித்துள்ளார். அதேவேளையில், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வர இருக்கும் நிலையில், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் சிக்கல் ஏதும் ஏற்படாது என நம்பப்படுகிறது.