டெல்லி: மோடி தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா காலத்தில் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிஎம் கேர் நிதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்படி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி கேம்ப் போடப்பபட்டு 45வயதுக்குமேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல மாநிலங்களில் போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள், வெண்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜன் தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. மக்களிடம் பெறப்பட்ட பி.எம்.கேர். நிதி என்ன ஆனது? என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.