திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக  விழா ரத்து செய்யப்பட்டு  இருந்தாலும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு  அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவில்  மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவிலிலும் திருவிழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டு உள்ளது.  அதன் காரணமாக, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலும்,  நோய் தொற்றை தடுக்கும் விதமாக கோவிலில் சித்திரை திருவிழாநடைபெறாது என்றும், ஆனால், வழக்கம்போல கோவிலில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும், இதில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் பாதுகாப்பாக தரிசனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டும்,  காரோனா  ஊரடங்கு காரணமாக மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா, சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த இருவாரங்களுக்கு முன்பு தெப்பத்திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.