மும்பை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மும்பை நகரில் 3 பிரம்மாண்டமான மருத்துவமனைகள் தொடங்க உள்ளன.
இந்தியாவில் கொரோனா பரவல் மகாராஷ்டிராவில் அதிக அளவில் உள்ளது. இதில் குறிப்பாக மும்பை நகர் அதிக பாதிப்புள்ள பகுதியாக உள்ளது. இங்கு இதுவரை 5.20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். நேற்றுவரை 4.165 லட்சம் பேர் குணம் அடைந்து 91,100 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிப்பதால் மும்பை நகரில் மருத்துவமனைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மும்பை பெருநகர மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 141 மருத்துவமனைகளில் 19,151 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 3,777 படுகைகள் மட்டுமே காலியாக உள்ளதால் இன்னும் 7 நாட்களில் இந்த எண்ணிக்கையை மேலும் 1,100 உயர்த்தப்பட உள்ளன.
கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் மும்பையில் மூன்று பிரம்மாண்டமான மருத்துவமனைகள் இன்னும் 2 அல்லது மூன்று வாரங்களில் மகாராஷ்டிர அரசால் தொடங்கப்பட உள்ளன. இதில் தலா 2000 படுக்கைகள் அமைந்திருக்கும். இதில் 200 ஐசியு படுக்கைகளும் 70% ஆக்சிஜன் அளிக்கக்கூடிய படுக்கைகளும் அடங்கும். நகரின் மூன்று பகுதிகளில் இவை தொடங்கப்பட உள்ளன.
தவிர கொரோனா சிகிச்சைக்காகத் தனிமை வார்டுகளை அமைக்க ஒரு சில 4 நட்சத்திர மற்றும் 5 நட்சத்திர விடுதிகளுக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் முக்கிய மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். ஏற்கனவே குணம் அடைந்து தனிமையில் இருக்க வேண்டிய நோயாளிகள் இந்த விடுதிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.