டில்லி
நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.6 லட்சத்துக்கும் அதிகமாகி உள்ளது. உலக அளவில் இது மிகவும் அதிகமாகும். கொரோனா பரவுவதைத் தடுக்க தடுப்பூசிகள் மிகவும் அவசியமாகும். தற்போது இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் ஆகியவை போடப்படுகின்றன.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தற்போது உள்நாட்டுத் தேவை அதிகமாக இருப்பதால் இந்த இரு கொரோனா தடுப்பூசிகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் மத்திய அரசை வலியுறுத்தினர்.
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கையின்படி நாட்டுக்கு அத்தியாவசியமான பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்க முடியும். எனவே தற்போது நமக்கு கொரோனா தடுப்பூசிகள் அத்தியாவசிய தேவையாக உள்ளதால் அவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்க வேண்டும் என நாடெங்கும் கோரிக்கை எழுந்துள்ளது.
சர்வதேச கொரோனா தடுப்பூசி அமைப்பு இந்தியாவில் இருந்து 9 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு ஆர்டர் அளித்துள்ளது. இதில் இந்திய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 1.8 கோடி டோஸ்கள் மட்டுமே அளித்துள்ளனர். இதையொட்டி அரசு அதிகாரிகள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த கூட்டத்தில் இரு நிறுவனங்களும் தங்கள் ஏற்றுமதியை நிறுத்தினால் தங்கள் மீது மற்ற நாடுகள் சட்ட பூர்வ நடவடிக்கைகள் எடுக்கும் என அரசுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தவிரப் பல ஏழை நாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் இலவசமாகவும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குகிறது.
எனவே தற்போதைய நிலையில் மத்திய அரசு ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் நிலையில் இல்லை எனக் கூறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யாவிட்டால் வெளிநாடுகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டிய நிலை உள்ளதால் மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என அதே தகவல்கள் தெரிவிக்கின்றன.