வாஷிங்டன்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 60 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகச் சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை உலக அளவில் 13.62 கோடி பேர் பாதிக்கப்பட்டு 29.49 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்றுவரை 10.98 கோடி பேர் குணம் அடைந்து 2.38 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர். உலகெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க முடியாத நிலையில் பல ஏழை நாடுகள் உள்ளன. இதையொட்டி உலக சுகாதார அமைப்பு இவர்களுக்கு உதவ கோவாக்ஸ் என்னும் திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தில் பல்வேறு நாடுகள் இணைந்துள்ளன. இதில் 60 ஏழை நாடுகளுக்கு இந்த நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக அளித்து வந்தன.
தற்போது அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருவதால் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளது. எனவே இந்த 60 ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அங்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு முதல் டோஸ் போடப்படுவதே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலில் இந்த 60 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து அதனால் உலகெங்கும் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.