திருச்சூர்
திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் விழாவால் சுமார் 20000 பேருக்கு மேல் கொரோனா பரவலாம் என மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும் இந்த விழாவில் 30க்கும் அதிகமான யானைகள் கலந்து கொள்ளும் குடை மாற்றும் நிகழ்வு, செண்டை மேளம், பஞ்சவாத்தியம் வாண வேடிக்கை போன்றவை சிறப்பானதாகும். இதை கண்டு களிக்க லட்சக்கணக்கானோர் வருவார்கள்.
கடந்த வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த விழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் விழா நடைபெறாது என எதிர்பார்ப்பு இருந்தது. ஆயினும் இந்த பூரம் விழாவை அவசியம் நடத்த வேண்டும் அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி கட்டுப்பாடுகளுடன் இந்த விழா நடைபெறும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில் திருச்சூர் மருத்துவ அதிகாரி டாக்டர் ரீனா, “திருச்சூர் பூரம் விழா நடந்தால் சுமார் 1 லட்சம் பேர்கள் வரலாம். அவர்களில் சுமார் 20000 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடையக்கூடும் அதில் சுமார் 10% பேருக்கு மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டே கேரள மாநில அரசு இந்த விழாவுக்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.