டில்லி

ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க  அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்றைச் சமாளிக்க பவேறு நாடுகளும் தடுப்பூசி போடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.   இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.  இவை இரண்டும் இரண்டு டோஸ்களாக போட வேண்டியவை ஆகும்.

பல உலக நாடுகளில் பயன்பாட்டில் உள்ள பிஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக் உள்ளிட்ட பல தடுப்பூசிகள் இரண்டு டோஸ் போடவேண்டியவையே ஆகும்.  இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரேடோஸ் மட்டும் போடக்கூடிய தடுப்பூசியை தயாரித்துள்ளது.  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்கு அனுமதி வழங்கி உள்ளன

இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜான்சன் நிறுவனம் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.  அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கள் தடுப்பூசி சோதனை நடத்த இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.  உலகெங்கும் பாதுகாப்பான மற்றும் 85.9% திறனுள்ள எங்கள் தடுப்பூசியைக் கொண்டு வரக் கவனம் செலுத்தி வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.