பம்பா: சித்திரை மாதப்பிறப்பு மற்றும் கேரளாவின் விசேண விஷு பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. காரோனா அதிகரிப்பு காரணமாக, பக்தர்கள் சபரிமலை வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.
சித்திரை தமிழ்ப்புத்தாண்டு ஏப்ரல் 14ந்தேதி பிறக்கிறது. கேரளாவில் அன்றைய தினமே மலையாள புத்தாண்டு பிறக்கிறது. இதை விஷு தினமாக மலையாளிகள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் விசேஷ பூசைகள் நடைபெறுவது வழக்கம். அதற்காக, இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலை மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறார். தொடர்ந்து ஊழியர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இன்றைய பூஜையில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதன்பின் நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிேஷகம் , வழக்கமான பூஜைகள் துவங்கும்.
நாளை முதல் ஏப்ரல் 18ந்தேதி வரை அனைத்து நாட்களிலும் காலை முதல் இரவு வரை கோவில் நடை திறந்திருக்கும். அப்போது, கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, களபாபிேஷகம், மாலையில் தீபாராதனை, இரவு படிபூஜை, அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும்.
ஏப்ரல் 14ந்தேதி புத்தாண்டு அன்று விஷு நிகழ்சியாக அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷூக்கனி தரிசனம் நடைபெறும்.
ஏப்ரல் 18ந்தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை முதல் ஏப்ரல் 18 வரை ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டீவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும்.
இவ்வாறு தேவஸம் போர்டு அறிவித்து உள்ளது.