மும்பை: போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தையும், கெளதம் அதானி இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை, 35வது ஆண்டாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் கோடீஸ்வரராக அமேசான் சிஇஓ ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் 151 பில்லியன் டாலருடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் உள்ளார். இவரின் டெஸ்லா நிறுவன பங்குகள், கடந்தாண்டை விட 705% அதிகரித்ததே இவரின் சொத்து மதிப்பு உயர காரணமாக கூறப்படுகிறது.
ஆசியளவில் பெரும் கோடீஸ்வரராக ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்தார். கடந்தாண்டு சீனாவின் ஜாக் மா இருந்த நிலையில், அந்த இடத்தை அம்பானி பெற்றுள்ளார்.
சுமார் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் கோடி சொத்துடன், இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாமிடத்தில் சுமார் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடி சொத்துடன் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக, 3 முதல் 5 இடங்கள் முறையே, எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், அவன்யூ சூப்பர் மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி, கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக் ஆகியோர் உள்ளனர்.
கடந்தாண்டு 102 பேர் கோடீஸ்வரர்களாக இருந்த நிலையில், இந்தாண்டு, அந்த எண்ணிக்கை 140 என்பதாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது. 724 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 698 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.