சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அரசியலிலும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் என்பதை தமிழக வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, பல மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்து வருவது நாடறிந்த ஒன்று. தற்போது, தேர்தல் நடைபெறவுள்ள கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி மண்ணை கவ்வுவது உறுதியாகியுள்ளதை பல்வேறு கருத்துக் கணிப்புகளும், அரசியல் விமர்சகர்களும் அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சாதி, மத அடிப்படையில் அணி சேர்க்கும் பாஜகவின் முயற்சி மிகவும் ஆபத்தானது. மத்திய பாஜக அரசின் கொடிய மதவெறி திட்டங்களுக்கும், மாநிலங்களையும் பிராந்திய அரசியல் கட்சிகளையும் கபளீகரம் செய்து ஒற்றை ஆதிக்க எதேச்சதிகார ஆட்சியை நிறுவத் துடிக்கும் அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டுவதை உறுதி செய்கிற ஒரு தேர்தல் என்றால் மிகையல்ல. தமிழகத்தின் நலன் காக்கவும், அதிமுக-பாஜக கூட்டணி மறுசிந்தனையின்றி வீழ்த்தப்பட வேண்டியது காலத்தின் கட்டளையாகும்.
இத்தகைய சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் காத்திட பாஜக- அதிமுக கூட்டணியை வீழ்த்துவது ஒன்றே மக்களின் உறுதியான கடமையாகும். இதனை சீர்குலைக்கும் வகையில் சில கட்சிகளும், சில சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிடுவது வேதனையாகும். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாஜக – அதிமுக கூட்டணியின் எதிர்ப்பு வாக்குகளை இவர்கள் பிரிப்பது மக்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, வீழ்த்த வேண்டிய பாஜக- அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக சேவகம் செய்வதாகவே அமைந்துவிடும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
அதிமுக மீது சவாரி செய்து கொண்டு பாஜக தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது. தேசிய அளவில் இன்றைக்கு பாஜக வலுவான முறையில் பின்னுக்கு தள்ளப்பட வேண்டுமானால் தமிழகத்தில் அது சவாரி செய்துகொண்டிருக்கிற அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலக்கினை நிறைவேற்றுகிற சக்தி திமுக தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிடம் மட்டுமே உள்ளது.
தமிழக வாக்காளப் பெருமக்களும், இளம் தலைமுறை வாக்காளர்களும் இதை மனதில் கொண்டு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறவுள்ள வாக்குப் பதிவின் போது, நாம் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் நமது குழந்தைகள்-சகோதரிகள்-இளைஞர்கள்-விவசாயிகள்-தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான வாக்கு என்பதை எண்ணிப்பார்த்து திமுக தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தில் வாக்களித்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.