ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி, நிதானமாக ஆடி, போட்டியை டிரா செய்தது.
விண்டீஸ் அணி நிர்ணயித்த 377 ரன்கள் டார்க்கெட்டை நோக்கி ஆடத் தொடங்கியது இலங்கை அணி. 101 ரன்கள் எடுக்கும்வரை ஒரு விக்கெட்டையும் இழக்கவில்லை. மேலும், தேவையான ரன்களைவிட, பந்துகளின் எண்ணிக்கையும் கணிசமான எண்ணிக்கையில் அதிகமாகவே இருந்தது.
ஆனால், அதன்பிறகு நிலைமை அப்படியே மாறியது. திரிமன்னே 114 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டான பின்னர், கருணரத்னேவும் இன்னும் நிதானமாக ஆடத் தொடங்கினார். அவர் 176 பந்துகளில் 75 ரன்கள் மட்டுசூம அடித்து அவுட்டானார்.
அதன்பிறகு, பெர்ணான்டோ 119 பந்துகளில் 66 ரன்களை அடித்தும், தினேஷ் சந்திமால் 66 பந்துகளில் 10 ரன்களை அடித்தும் களத்தில் இருந்தனர். இலங்கையின் ஒரு வீரர் கூட சிக்ஸர் அடிக்கவில்லை. வெற்றியை நெருங்கிப் பார்க்கலாம் என்ற முயற்சியைக்கூட அவர்கள் மேற்கொள்ளவில்லை.
இறுதியில், மொத்தம் 79 ஓவர்கள் ஆடிய இலங்கை அணி, வெறுமூ 193 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இதன்மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், எந்த வெற்றி-தோல்வியும் இல்லாமல் டிரா ஆகியுள்ளது.