சென்னை:  அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல், காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல் பிரசாரங்களால், போக்குவரத்தை தடுத்து நிறுத்துதல் போன்ற இடையூறுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தாமல், பிரச்சாரங்களை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த எம்.ஞானசேகர் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சார கூட்டங்களில் அரசியல் கட்சியினர் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும் இடங்களில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பிரச்சாரங்களில் சாதாரண மக்கள், சிரமப்படக்கூடாது என்றும், ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நீண்ட நேரம் தடுக்க கூடாது என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தினர்.  கட்சியினரின் பிரசாரலங்களால், மக்களுக்கு பெருத்த அளவிலான சிரமங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.