சென்னை: முதல்வரின் தாயார் குறித்து அவதூறாக பேசியதால், திமுக எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு தடை கேட்டு ராசா சார்பில் உ யர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
திமுக எம்.பி ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின்போது, அருவறுப்பான முறையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என விமர்சித்து இருந்தார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனால், தடாலடியாக மன்னிப்பு கோரினார். ஆனால் இணையதளத்தில் ராசா பேசிய வீடியோக்கள் வைரலாயின.
அதைத்தொடர்ந்து, ‘ராசாவை இனி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கும் ராசா தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆ.ராசாவின் விளக்கம் திருப்தியாக இல்லாததால், முதல்வர் பற்றி அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் திமுக எம்.பி ஆ.ராசா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அத்துடன் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயரையும் நீக்கியுயும் உத்தரவிட்டது.
இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள திமுக தலைமை, உடடினயாக நீதிமன்றம் சென்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஆ ராசா அவசர வழக்காக விசாரிக்க கூறியதை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.