சென்னை:

காவல்துறை அனுமதியின்றி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக  போராட்டம் நடத்தினால், அவர்களை அப்புறப்படுத்தலாம் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள  குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களையும், குழந்தைகளையும் முன்னிலைப்படுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி வணிகமும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுந்தரர், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது…

விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யுங்கள் என்றும் தமிழக டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.