இம்பால்:
பாஜகவில் சேர தனக்கு ரூ.35கோடி ஆஃபர் வழங்கப்பட்டதாக, மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் எம்எல்ஏ மகேஷ் பார்மர் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக தில்லுமுல்லு வேலையில் இறங்கி உள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ஆட்சியைப் பிடித்ததுபோல, ம.பி.யிலும் ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி வருகிறது.
231 சட்டப்பேரவை தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரசும், 109 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை பலத்துக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளின் தலா இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடக்கிறது.
இந்த ஆட்சிகை கவிழ்க்கும் நோக்கில், ‘ஆபரேஷன் கமல்நாத்’ என்ற திட்டத்தை பாஜக அறிவித்து உள்ளது. அதன்படி, கமல்நாத் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்,. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக பேரம் பேசி, ஆசைக்காட்டி 8 எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஐடிசி ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது, கடத்தப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான மகேஷ் பார்மர், பாஜக தனக்கு ரூ.35 கோடி வரை ஆஃபர் செய்தது. ஆனால், தான் அவர்களுக்கு ஆதரவு தர முடியாது என்று மறுத்து விட்டேன்; தனது ஆதரவு எப்போதுமே கமல்நாத்துக்குத்தான் என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அயோக்கியத்தனம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.