சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு ஒரு வழக்கை விசாரிக்க இருக்கிறது.
சர்வதேச மகளிர் தினம் வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இஎஸ்ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பது தொடர்பான வழக்கை விசாரிக்க, புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், ஆஷா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் இரு பெண் நீதிபதிகள் வழக்குகளை விசாரித்துள்ளபோதும், 3 நீதிபதிகள் அமர்வு தற்போது தான் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 55 நீதிபதிகளில் 9 பேர் பெண்கள். அவர்களில் பெரும்பாலோர் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் (இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்) பதவிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள்.
முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனைத்து பெண்கள் அமர்வை கொண்டிருந்தது. உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அதிக பெண் நீதிபதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.