சென்னை:
காவேரி – கோதாவரி இணைப்பு தொடர்பாக ஆந்திரா முதல்வருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும், ஆந்ததிரா,  தெலுங்கானா முதல்-மந்திரிகளை சந்தித்து திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் தெரிவித்தார்.

மேட்டூரில் சரங்க திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  காவிரி-கோதாவரி திட்டம் என்பது கனவு திட்டமாகும். அந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 200 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இதனால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் பயன்பெறுவார்கள்.

இந்த நதிகள் இணைப்பு திட்டம் தமிழகம்,தெலுங்கானா, ஆந்திரா,  ஆகிய 3 மாநிலங்கள் சேர்ந்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மத்தியஅரசு ரூ.64 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேச  நான் கடிதம் மூலமாக நேரம் கேட்டிருந்தேன், அவரும் சம்மதித்துள்ளார். அதைத்தொடர்ந்தே, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும், ஆந்திர முதல்வரை சந்தித்து என்னுடைய கடிதத்தை கொடுத்து, பேசி உள்ளார்கள்.

இதுபோல தெலுங்கானா முதல்வரை சந்திப்பதற்கும் நேரம் கேட்டுள்ளோம், அவர்களும் விரைந்து நேரம் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்கள்.  விரைவில் 3 மாநில முதல்வர்களும் ஒன்றாக இணைந்து பேசி ஜெயலலிதா கண்ட கனவு திட்டமான காவிரி கோதாவிரி திட்டத்தை  நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்து நிறைவேற்றுவோம், இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இதனால் தமிழகத்தில் உள்ள வறண்ட பகுதிகள் அனைத்தும் செழிக்கும்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பியது போக 2-ம் கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் வறண்ட ஏரிகளுக்கும் திருப்பிவிட வேண்டும் என்று அமைச்சர் பி.தங்கமணி என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவும் அரசின் பரிசீலனையில் உள்ளது. விவசாயிகளுக்கு அ.தி.மு.க. அரசு எப்போதும் அரணாக திகழும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.