டெல்லி: கொரோனா வைரசால் மக்கள் பீதியடைய வேண்டியது இல்லை, என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர், அவர்கள் நலமுடன் வீடு திரும்பினர்.

தற்போது டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கும் இத்தாலி நாட்டு பயணிக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசால் மக்கள் பீதியடைய வேண்டியது இல்லை, என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து பீதி அடையத் தேவையில்லை. மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சுய பாதுகாப்புக்காக சிறிய, ஆனால் முக்கியமான பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அவசர ஆலோசனை நடத்தினேன்.

பல்வேறு அமைச்சகங்களும் மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு வருபவர்களை சோதனை செய்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது வரை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றார்.