பெய்ஜிங்: புதிய கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் 2அதிகாரிகளை படுகொலை செய்ததற்காக சீன நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரசால் 80000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3000 பேர் பலியாகி இருக்கின்றனர். இதையடுத்து, சீனாவின் பல பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள், மருத்துவ சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல கிராமங்களில் அங்குள்ள மக்களே சுயமாக சோதனைச்சாவடி ஒன்றை அமைத்துள்ளனர். வெளியூர்களில் இருந்து தங்கள் கிராமங்களுக்கு வருபவர்களை கட்டுப்படுத்துகின்றனர்.

இந் நிலையில், உள்ளூர் கிராம சோதனைச் சாவடியில் 2 அதிகாரிகளை குத்திய, 23 வயது இளைஞருக்கு ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பிப்ரவரி 6ம் தேதி, தென்மேற்கு யுன்னான் மாகாணத்தின் ஹோங்கேவில் உள்ள லுயோ மெங் கிராமத்தில் சோதனைச் சாவடி வழியாக மா ஜியாங்குவோ என்பவர் ஒரு மினிவேனை ஓட்டிக்கொண்டிருந்தபோது, ​​அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவர் சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் ஒத்துழைக்க மறுத்தார். அப்போது ஆத்திரம் அடைந்த மா ஜியாங்குவோ, அதிகாரியை கத்தியால் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்றாருவரையும் அவர் குத்தினார்.

படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மா ஜியாங்குவோ தாமாக முன் வந்து சரண் அடைந்தாலும் அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இருக்கிறது,