புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வாயிலாக அரசுக்கு ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரியில் ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் குறித்த விபரங்களை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; பிப்ரவரியில் ஜிஎஸ்டி மூலம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 366 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அதில் மத்திய ஜிஎஸ்டி மூலம் 20 ஆயிரத்து 569 கோடியும், மாநில ஜிஎஸ்டி மூலம் 27 ஆயிரத்து 348 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் 48 ஆயிரத்து 503 கோடியும், கூடுதல் வரி மூலம் 8 ஆயிரத்து 947 கோடியும் கிடைத்துள்ளது என்றுள்ளது.