டில்லி
வன்முறையாளர்களால் எரிக்கப்பட்ட இஸ்லாமியக் காவலர் இல்லத்தை மீண்டும் கட்டித் தர எல்லை பாதுகாப்புப்படையினர் முன் வந்துள்ளனர்.

டில்லியில் சமீபத்தில் நடந்த வன்முறையில் ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் 4 மசூதிகள் எரிக்கப்பட்டு அருகில் உள்ள கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இவ்வாறு வீடு இழந்தவர்களில் எல்லைப் பாதுகாப்புப் படை காவலரான முகமது அனீஸ் என்னும் 29 வயது இஸ்லாமியரும் ஒருவர் ஆவர்.

முகமது அனீஸ் வீடு கஜுரிகாஸ் விரிவாக்கப்பகுதியில் அமைந்துள்ள மூன்றடுக்கு வீடு ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அன்று அனீஸின் வீடு வன்முறையாளர்களால் கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டு அதன் பிறகு எரிக்கப்பட்டுள்ளது. அனீஸுக்கு வரும் மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அவர் வீடு எரியும் போது திருமணத்துக்கு வாங்கப்பட்ட நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரொக்கம் ஆகியவையும் எரிந்து போய் விட்டன.
தற்போது ஒரிசாவில் பணியாற்றி வரும் முகமது அனீஸ் தனது இல்லம் எரிக்கப்பட்டது குறித்து மேலதிகாரிகளிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. செய்தி ஊடகங்கள் மூலம் தகவல் அறிந்த எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜோக்ரி உடனடியாக அனீஸின் தந்தையைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்துக் கொண்டுள்ளார்.
தற்போது அனீஸின் வீட்டை மீண்டும் கட்ட எல்லைப் பாதுகாப்புப்படை முன்வந்துள்ளதாக ஜோக்ரி தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான பணத்தை எல்லைப் பாதுகாப்புப்படையின் மூத்த அதிகாரிகள் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இல்லம் இன்னும் 10 அல்லது 15 தினங்களில் தயார் செய்யப்படும் எனவும் அவர் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]