ரிஷிகேஷ்

கும்பமேளா இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் மேலும் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நாடெங்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  எனவே அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக உத்தரகாண்ட் மாவட்டத்தில் தற்போது கும்பமேளா நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் இங்கு கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது.

இங்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இடுப்பினும் இம்மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  இந்த நகரங்களில் கும்பமேளா காலத்தில் மேலும் அதிக அளவில் பரவலாம் என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஹரித்வாரில் ஒரு ஆசிரமத்தில் 32 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தீவிர கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.  ஆசிரமம் கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு அங்கு வசிப்போர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரிஷிகேஷ் நகரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் தங்கிய ஒருவர் உட்பட 76 பேருக்கு கொரோனா பரவியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இந்த விடுதி மூன்று நாட்கள் அடைக்கப்பட்டு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றது.  மாநிலம் எங்கும் அவ்வப்போது கொரோனா பரிசோதனை தீவிர அளவில் செய்வது அவசியம் என விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.