வுகான்

சீனாவில் உள்ள சோதனைச் சாலையில் இருந்து தவறுதலாக கொரோனா வெளியானதா என்பதை மேலும் விசாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற வருடத் தொடக்கத்தில் சீனா நாட்டின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.   அது சீனாவுக்குள் வேகமாக பரவி அதன் பிறகு வெளிநாடுகளுக்கும் பரவியது.   தற்போது அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா பாதிப்பு உள்ளது.   இந்த வைரஸ் சீனாவில் எவ்வாறு உருவானது என்பது குறித்து ஆராயப் பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சீனாவில் சோதனைக்காக உருவாக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் சோதனைச்சாலையில் ஏற்பட்ட தவறால் வெளியானதாகப் பல உலக நாடுகள் குற்றம் சாட்டின.   ஆனால் சீனா அதை மறுத்தது.  இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் குழு ஒன்றை அமைத்தது.  அந்த குழுவின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த ஆய்வறிக்கையின்படி கொரோனா வவ்வாலில் இருந்து பரவியதாக கூறப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.  வவ்வாலில் இருந்து மற்றொரு மிருகம் மூலமாக  மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது.  மேலும் சீனா தனது நாட்டு சோதனைச்சாலையில் இருந்து கொரோனா வைரஸ் வெளியாகவில்லை எனத் தெரிவித்தது உண்மையாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதனோம்  ”சோதனைச் சாலையில் ஏற்பட்ட தவற்றால் கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கவும் வாய்ப்புள்ளது.   இது குறித்து புதிய விசாரணை நடத்த வேண்டி உள்ளது.   எனவே இது குறித்து ஒரு குழுவை அமைக்க நான் தயாராக உள்ளேன்.  உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்த வரை அனைத்து பணிகளும் இன்னும் செயல் அளவில் உள்ளன.

இது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும் அவை எவ்வித முடிவையும் எட்டவில்லை.  இன்னும் இந்த வைரஸ் எங்கு எப்போது உருவானது அல்லது உருவாக்கப்பட்டது என்பது கண்டறியப்படவில்லை.   விஞ்ஞான பூர்வமாக இது குறித்து முடிவு செய்ய எந்த ஒரு நடவடிக்கையையும் விடாமல் தொடர வேண்டும்.   சீனா இதற்கான முழு ஒத்துழைப்பை அளித்து அனைத்து விவரங்களையும் ஆய்வுக் குழுவிடம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.