கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 7

ராக்கப்பன்

சங்கிலி முறித்த கருப்பர் கதை

 

ஆதியின் நினைவலைகள் யாவும் கருப்பர் மற்றும் கோட்டையில் இருந்த மனிதர்களை பற்றியே இருந்தது. அவன் கால்களும், மனமும் சிறிதுகூட நிற்பதற்கு சம்மதிக்கவில்லை. பைரவரும் ஆதியும் விடியலோடு போட்டிபோட்டு முந்தினார்கள். ஆனால், அவர்கள் முன்னாள், விஜயரகுநாதரும் விரைந்து வந்துகொண்டு இருப்பதை பார்த்து நின்றார்கள்.

போருக்கான ஆயத்தங்களை மேற்பார்வையிட்ட விஜயரகுநாதருக்கு, ஏனோ, வல்லவராயரின் படை நடவடிக்கைளில் சந்தேகம் ஏற்படுத்தியது. அதை, உறுதித்திப்படுத்த அவர் அனுப்பிய உளவாளிகள் தமது கோட்டையின் மீதான தாக்குதலை உறுதிப்படுத்தினார்கள். உடனானடியாக, ரகுநாதரை  படைகளுக்கு பொறுப்பேற்க செய்து, அறிவுடை நம்பியும் விஜயரகுநாதரும் ஒரு சிறிய படையுடன் தமது கோட்டையை நோக்கி புறப்பட்டார்கள்.

மூச்சிரைக்க ஓடிவந்த ஆதி, விஜயரகுநாதரிடம் கோட்டையின் முற்றுகையை அறிவித்தான். அவன் மூச்சும் பேச்சும் அந்த அறிவித்தலோடு முடிந்தது. ஒருபுறம் அவனின் கடமை உணர்வில் மெய்சிலிர்த்தாலும், விஜயரகுநாதருக்கு கோட்டையில் சொற்பமாய் இருந்த கருப்பர் மற்றும் தனது குடி என்ன ஆனதோ என்ற படபடப்பு தொற்றியது. ஆதியை சடலமாக சுமந்து, நெஞ்சில் ஆயிராயிரம் கவலைகளுடன் புறப்பட்டார், கோட்டையை நோக்கி.

விஜயரகுநாதரின் வேகம் பிரமிப்பாய் இருந்தது. அவரும் அவருடைய படையும் மின்னல் வேகத்தில் கோட்டையை எட்டினார்கள். ஆனால், கோட்டை நிசப்தமாய் இருந்தது. முற்றுகை படை அங்கு இல்லை. ஒரு வேளை, முற்றுகை வென்று வல்லவராயர்கள்  திரும்பி இருப்பார்களோ ? ஆனால், அருகாமையில் செல்ல செல்ல மிக பெரிய மூர்க்கமான  போர் நடந்ததற்கான அறிகுறி தெரிந்தது.

விஜயரகுநாதரை கண்ட கண்ணப்பரும், ராக்கப்பனும் மற்றவரும் நிகழ்ந்த வீரகாவியத்தை கண்ணீரோடு விவரித்தார்கள். அவர்கள் கண்ணீரோடு மழையும் சேர்ந்து அழுதது. கோட்டையை காக்க வீரகாவியமான கருப்பர், அங்கு இருந்தவர்கள் மனங்களை போன்று தம் மனதிலும் நிறைந்தார்.

கோட்டை காத்த கருப்பர் கோடையில் இருந்த  அனைவர் மனங்களிலும் குல தெய்வமாய் நின்றார். கோட்டையில் இருந்தவர்கள் ஆதியின் மரண செய்தி கேட்டு மேலும் துயருற்றார்கள். ஆயர் கூட்டத்தில் இத்தனை கடமை உணர்வா என்று அறிவுடை நம்பி என்ன ஓட்டம் இருந்தது.

கருப்பரையும் அவரோடு சேர்ந்த ஆறு சகோதரர்களையும், ஆதியையும் கருந்தமலை எடுத்து செல்வதாக முடிவு செய்தார்கள். வழியெங்கும், கருப்பரின் வீரம் போற்றி புகழப்பட்டது. அவர்கள் கருந்தமலை அன்று இரவு சென்று சேர்ந்தார்கள். வீரத்தாள், முன் நின்று தனது சகோதர்கள் சடலங்கள் பெற்றால்.

தன் சபதம் மீறி சென்ற சகோதரர்கள், சடலமாக கருந்தமலை திரும்பியதை எண்ணி வேதனையுற்றால். ராக்கப்பனை அழைத்த வீரத்தாள், இனி ஒருமுறை கூட போர்க்களம் செல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கி, ஆடு மாடுகளோடு வாழு, காடுகள் வாழ்க்கை போதும், பெண்டு பிள்ளைகளோடு ஊர் பசியாற்றி வாழ்க என்று வாழ்த்தி உயிர்விட்டாள்.

விஜயரகுநாதருக்கோ, ஒன்றும் புரியவில்லை. சகோதரர் இறப்புக்காக,  கூட பிறந்தவள் உயிர் துறப்பாளா ?  வீரத்தாள் பெண்ணாக தெரியவில்லை. அவள் ஒரு பெண் தெய்வமாகவே தெரிந்தால். கருப்பர் கூட்டத்திற்கோ, அவள் அக்காள் தெய்வகமாக மாறினாள்.

ஆதியின் சகோதரர் கருப்பர், முன்னர் யார் அழைத்தும் கருந்தமலையைவிட்டு கீழ்வரவில்லை. குணத்தில் மூர்கமானவர், பாசத்தில் கரும் மேகம் போன்றவர், அவர் அழுத அழுகையை கண்டு கருந்தமலையே கலங்கியது. தன் சகோதரனையும், தன் மாமனையும் இழந்த கருப்பரால் சினம் தாங்கமுடியவில்லை.

யாருக்கும் தீங்கிழைக்காத தன் மாமனுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பழிவாங்க சபதமேற்றார். அந்த காடே துயரத்தை உள்வாங்கியது. தன்னை பெரிதும் காத்த கூட்டம் தன்னை விட்டு போக போகிறார்கள் என்று  அழுதது.

துயரத்தில் இருந்து மீண்டவர்களாக, ஆதியின் சகோதரர் கருப்பரும், ராக்கப்பனும் ஏனைய ஆயர் கூட்டத்தாரும் கருந்தமலையை விட்டு விஜயரகுநாதருடன் புறப்பட்டார்கள். அவர்களோடு எண்ணிலடங்கா பசுக்களையும் ஆடுகளையும் காடுகளில் இருந்து கீழ்நோக்கி  அழைத்து சென்றார்கள்.

கோட்டையை அடைந்த அறிவுடை நம்பி தனது கடைமையை ஆற்றத்தொடங்கினார். மிச்சமுள்ள பகையும், நெருப்பும் பேராபத்து என்றார். அதை எச்சம் இல்லாமல் முடிக்க வேண்டும் என்றார்.

கருப்பரும், தன் சபதத்தை நினைவு கூர்ந்து, வல்லவராயர்களை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்றார். போருக்கான நாள் குறிக்கவேண்டும் என்ற போது, கருப்பர், குறுக்கிட்டு தன்மான போருக்கு நல்ல நாள் பார்க்கவேண்டியதில்லை. உடனடியாக தாக்கவேண்டும் என்றார். அறிவுடை நம்பியும், அதை ஆமோதிப்பதாக, வல்லவராயர்கள் தலைமை இழந்து இருக்கிறார்கள், அவர்கள் சுதாரிப்பதுற்குள் தாக்குதல் தொடங்க வேண்டும் என்றார்.

மறுநாள் காலையே, வல்லவராயர்களின் கோட்டையை முற்றுகை இடுவதாக முடிவானது. உடனடியாக, படை புறப்பட்டது. கருப்பர் தம் மாமன் மற்றும் தன் தங்கையின் நினைவுகளோடு போர் களம் புறப்பட்டார்.

சூரியன் உதிக்கும் அதிகாலை வேளையில், மூர்க்கமான தாக்குதலை விஜயரகுநாதரின் படை நடத்த தொடங்கியது. வல்லவராயர்கள் தற்காப்பு போருக்கு தயாராய் இருந்தார்கள். அனைத்து கோட்டையின் வாயில்களும் மூடப்பட்டு பலமான சங்கிலிகளால் பிணைக்க பட்டிருந்தது.

விஜயரகுநாதரின் படைகளால் கோட்டை வாயில்களின் உள் புக முடியவில்லை. வல்லவராயர்களுக்கு துணையாக செஞ்சியில் இருந்து ஒரு படை வருவதாகவும், அவர்கள் இன்று மாலைக்குள் கோட்டையை அடைந்துவிடுவார்கள் என்று ஒற்றர்கள் செய்தி கொண்டு வந்தார்கள். நிகழ்வுகளின் விபரீதம் அறிந்த அறிவுடை நம்பி, கோட்டையின் சங்கிலிகளை முறித்து உடனடியாக கோட்டையினுள் புகுந்தால் ஒழிய வல்லவராயர்களின் பகையை முற்றிலிலுமாக ஒழிக்கமுடியாது என்று விவரித்தார்.

கருப்பரோ, தானே கோட்டையின் உள்புகும் தாக்குதல் படையணியை வழிநடத்த விரும்புவதாக சொன்னார். அவர் தாம் விரும்பி பருகும் காட்டு கள் அருந்தினர். சுருட்டை பிடித்தபடி கம்பீரத்துடன் குதிரை ஏறினார். அந்த கோலம் கண்ட யாரும் அச்சமுறுவர். சினத்தோடு, வீரமும், கம்பீரமும் சேரும் போது எதிரில் யார் நிற்பார்கள். மரணமும் தள்ளித்தான் நிற்க வேண்டி வரும்.

விஜயரகுநாதரின் கண் எதிரே ஒரு மிக பெரிய தாக்குதல் நிகழப்போகிறது என்பதை அவர் மனம் சொல்லியது. கருப்பரின், வீர ஆவேசம் கண்ட மற்றைய வீரர்களும் தன்னுணர்வு கொண்டு தாக்குதலுக்கு புறப்பட்டார்கள். அவர்களுடைய தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வல்லவராயர்களின் கோட்டையின் வெளிப்புற தற்காப்பு அரண்கள் வீழ்ந்தது. கோட்டையின் பிரதான நுழைவாயிலை, கண் இமைக்கும் நேரத்தில் கருப்பரோடு சேர்ந்த கூட்டம் எட்டியது.

கோட்டையின் சங்கிலி முறிப்பு சமர் எவரும் எதிர்பாராத வேகத்திலும் வீரத்திலும் நிகழ்ந்து கொண்டு இருந்தது. கருப்பரின் முறுக்கேறிய உடல் வல்லமையின் சக்தியின் முன்னாள் நுழைவு வாயிலின் சங்கிலிகள் எம்மாத்திரம். அவருடைய சம்மட்டி அடிகளால், கோட்டையின் மதில்கள் அதிர்ந்தன. அவை அடியா அல்லது இடியா என கோட்டையின் உள்ளிருந்தவர்கள் கலங்கினார்கள்.

கோட்டை சங்கிலி முறிக்கபட்டது. நுழைவாயில் திறக்கப்பட்டது. கோட்டையின் சங்கிலி முறித்தார் கருப்பர், என்ற பேரொளி எழுப்பப்பட்டது. “சங்கிலி முறித்த கருப்பர்” உருவெடுத்தார் அங்கே.

அதேவேளையில், அவர் உடல் முழுக்க அம்புகள் துளைத்திருந்தது. அவர் மீது காய்ச்சிய எண்ணெய் ஊற்றியிருந்தார்கள், அவர் உடல் பாதி எறிந்த நிலையில் இருந்தது. ஆனாலும், அவர் கடமையில் இருந்து பின்வாங்கவில்லை. பகை முடிக்காமல் விடவில்லை. கோட்டை காத்த கருப்பர் கருணையின் பேராற்றல் என்றால் சங்கிலி முறித்த கருப்பர் பகை ஒழிக்கும் மகா சக்தி.

கோட்டையின் கதவுகளின் திறப்பிற்காக காத்திருந்த விஜயரகுநாதர், தமது படையுடன் கோட்டையின் உள்புகுந்து வல்லவராயர்களின்  கதை முடித்தார். விஜயரகுநாதர் ஒரு மிக பெரிய சாம்ராஜ்யத்திற்கான அடிக்கல்லை அன்று கண்டார். அதற்கான, களப்பலிகளாக, கோட்டை காத்த கருப்பரும், சங்கிலி முறித்த கருப்பரும் இருந்தார்கள்.

விஜயரகுநாதருக்கும் அவரது குடிகளுக்கும், ஒருவர் காக்கும் தெய்வம் மற்றவர் பகை முடிக்கும் தெய்வம்.

கோட்டை காத்த கருப்பர் மற்றும் சங்கிலி முறித்த கருப்பர் ஆகியோர் புகழ் அந்த சாம்ராஜ்யத்தின் திக்கெட்டும் பரவியது.