கேரள மாநிலத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பாரதிய ஜனதாவும் களத்தில் உள்ளது.
கேரளாவில் இரண்டு நாள் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு சென்றுள்ளார்.
ஆலப்புழை,கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் நேற்று ரோடு ஷோ நடத்தினார்.
வீதி வீதியாக பிரியங்கா சென்றபோது, சாலையில் இரு மருங்கிலும் ஏராளமானோர் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
கொல்லத்தில் நேற்று இரவு நடந்த பொதுக்கூடத்தில் அவர் பேசினார்.
“சட்டசபை தேர்தலில் வாக்களிக்க இருக்கும் கேரள மக்கள் முன்பு மூன்று அணிகள், உள்ளன –
ஒன்று- வன்முறை, மற்றும் ஊழலில் திளைத்த கம்யூனிஸ்டுகள் தலைமையிலான இடதுசாரிகள்.
இன்னொன்று, மத அரசியல் நடத்தி மக்களை பிளவு படுத்தும் – பாரதிய ஜனதா கட்சி.
மூன்றாவதாக உங்கள் முன்பு உள்ள அணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி.
கேரளாவை கட்டமைக்க தொலைநோக்கு பார்வையுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
இந்த மூன்று அணிகளில் யாரை தேர்வு செய்வது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என பிரியங்கா அப்போது பேசினார்.
– பா. பாரதி