மும்பை: நடிகர் சுதாந்த் தற்கொலைக்கு பிறகு, பாலிவுட்டில் போதை பொருள் தொடர்பான வழக்கு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக ஏற்னவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் அஜாஸ் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோனி பட புகழ் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து நடத்தப்பபட்ட விசாரணையில், பாலிவுட் மட்டுமின்றி பல மாநில திரையுலகினர் இடையே போதைப்பொருள் உபயோகப்படுத்தும் பழம் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில், முதலாவதாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜாஸ் கான் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், ஷாதாப் பாரூக் ஷேக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பில் இருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அஜாஸ் கான் ராஜஸ்தானில் இருந்து நேற்று இரவு மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் அவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்துச் சென்று தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 8 மணி நேர விசாரணைக்குப் பிறகுஅவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அஜாஸ்கானுக்கு சொந்தமான அந்தேரி மற்றும் லோகண்ட்வாலா பகுதிகளில் உள்ள வீட்டில் இருந்து போதை மாத்திரைகள் கிடைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அஜாஸ்கான், தனது வீட்டில் இருந்து நான்கு தூக்க மாத்திரைகளை மட்டுமே காவல்துறையினர் கைப்பற்றினர் என்று தெரிவித்துள்ளார். அஜாஸ்கான் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த வாரம் போதை பொருள் வியாபாரியான ஷாதாப் பாரூக் ஷாயிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட மெபெட்ரோன் என்ற போதை மருந்து 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.