ஆக்லாந்து: வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி.
மொத்தம் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர், இரு அணிகளுக்கு இடையே தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை, நியூசிலாந்து ஏற்கனவே கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம், முதலில் பந்துவீச முடிவெடுத்தது. மழை காரணமாக, ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டன. இதனால், நியூசிலாந்து அணியின் ஆட்டம் 17.5 ஓவர்களிலேயே முடிவுக்கு வந்தது.
அதுவரை அந்த அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்திருந்தது.
பின்னர், வங்கதேச அணி, 16 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் செளம்யா சர்கார் மட்டுமே அதிரடியாக ஆடினார். அவர், 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
முகமது நெய்ம் 38 ரன்கள் அடித்தாலும் அது அதிரடியாக ஆடிய ரன்கள் அல்ல. மஹ்மதுல்லா 21 ரன்களை அடித்தார். இறுதியில், 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த அந்த அணியால், 142 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதனால் 31 ரன்களில் வங்கதேசம் தோல்வியடைந்தது. நியூசிலாந்தின் டிம் செளதி, பென்னட் மற்றும் ஆடம் மில்னே தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
3 போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு போட்டிகளை வென்றதன் மூலம், நியூசிலாந்து டி-20 தொடரைக் கைப்பற்றிவிட்டது.