விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காக கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

நடிகர் விஜய் தன் தந்தை தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என தெரிவித்தார் .

இதையடுத்து 2021-ம் ஆண்டு பொங்கலுக்குப் பின் நல்ல அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இந்நிலையில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் “கடந்த சில நாட்களாக என்னை நேசிக்கும் நண்பர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் என்னிடம் யாருக்கு ஓட்டு போடுவது என்று கேட்கிறார்கள்.

நான் சொன்ன ஒரே பதில் யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை என்று வீட்டில் உட்கார்ந்து விடாதீர்கள். அது மிகவும் தவறு. நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அது உங்கள் உரிமை. ஜனநாயக கடமையும் கூட. பணம் வாங்கிவிட்டு வாக்களிக்காதீர்கள். வாக்குக்காக பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். அதையும் மீறி கொடுத்தாலும் வாங்காதீர்கள். நாம் பிச்சைக்காரர்கள் அல்ல.

புதியவர்கள் வந்தால் தான் அனைத்திலும் மாற்றம் வரும். புதியவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் காமராஜர், அண்ணா போல் இருக்க வேண்டும்.

மாற்றத்தைக் கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கும் பலர் அரசியலுக்கு வர பயப்படுகின்றனர். அவர்களை எப்படி வர வைப்பது. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தால் அதுவும் 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்தால் அது மாற்றத்தை ஏற்படுத்த அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். என கூறியுள்ளார் .