ராஜஸ்தான்

ராஜஸ்தான் இடைத் தேர்தல் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களில் பட்டியலில் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே பெயர் இடம் பெறவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளன.   ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த், சஹேதா, மற்றும் சுஹன்கர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.   இதையொட்டி பாஜக தனது பிரசார திட்டங்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பெயரை வெளியிட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பெயரையும் மற்றும் அவர் அமல்படுத்தி உள்ள திட்டங்களையும் கூறி பேச்சாளர்கள் வாக்கு சேகரிக்க உள்ளனர்.  இந்த தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கஜேந்திர சிங் செகாவத், அர்ஜுன் ராம் மெகாவால் மற்றும் கைலாஷ் சவுத்ரி போன்ற மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.  அத்துடன் மாநில தலைவர்களான சதீஷ் பூனியா, குலாப் கடாரியா, உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தர ராஜே பெயர் இடம் பெறவில்லை.   இந்த பட்டியலை ராஜஸ்தான் மாநில பாஜக பொறுப்பாளர் அர்ஜுன் சிங் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.   மூத்த பாஜக தலைவர்கள் சிலர் வசுந்தர ராஜேவுக்கு இந்த மூன்று தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தை விடத் தேசிய அளவில் அதிகம் பணி உள்ளதாக கூறி உள்ளனர்.

ஆனால் ஒரு சில பாஜகவினர் வசுந்தர ராஜே தனது ஆதரவாளர்களை இடைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகச் சுயேச்சைகளாக நிறுத்தி அமைச்சரவையில் இடம் பெற வைக்கத் திட்டமிட்டுள்ளதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் வசுந்தர ராஜே ஜனதா சேனா என்னும் அரசியல் அமைப்பின் மூலம் தனது ஆதரவாளர்களைத் தேர்தலில் நிற்க வைக்க முயல்வதாகவும்  கூறப்படுகிறது.

பெயர் தெரிவிக்க விரும்பாத பாஜக தலைவர் ஒருவர், “நாங்கள் மாநில அளவில் பாஜகவை எதிர்த்து நிற்க விரும்பியோரில் சுமார் 50% பேரைச் சமாதானம் செய்துள்ளோம்.  ஆனால் வசுந்தர ராஜேவின் ஆதரவாளர்கள் மூவர் சுயேச்சை வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.  நாங்கள் வசுந்தர ராஜேவின் ஆதரவாளர்கள் உதவியின்றி வெற்றி பெறுவோம் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சையை ஒரு சில பாஜக தலைவர்கள் மறுத்துள்ளனர்.  இன்று ராஜ்சமந்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.  வசுந்தர ராஜே இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் எனப் பலரும் எதிர்பார்த்தனர் .  ஆனால் வசுந்தர ராஜே வராதது சர்ச்சையை உறுதிப் படுத்தி உள்ளது.