டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு, சுகாதாரக் குழுவினை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொற்று பரவும் விகிதத்திற்கேற்ப மாநில அரசுகள் தடை உத்தரவுகளை பிறப்பித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொரோனா பரவல் அதிகமுள்ள 6 மாநிலங்களில் தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டும் நாட்டின் 79 சதவிகிதம் கொரோனா தொற்று பதிவாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.